fbpx

உறவுகளின் துரோகத்தில் கண்ணீரில் கரைந்த உண்மை காதல் ..! முடிந்தால் கண்ணீரை துடைக்க முயற்சியுங்கள்…! கயல்விழி

“அய் பாங்க் நவ பெரளுநாத (ஏன் டி கப்பல் கவிழ்ந்திட்டா )” என்று கேட்டப்படியே வந்தாள் ப்ரீத்தியின் தோழி ஹிரண்யா .(ஹிரு)
“நவ தியன்ன எபாயே பெரலன்ன .(கப்பல் இருக்க வேணாமா கவிழ)” பதிலளித்தால் ப்ரீத்தி …
ப்ரீத்தியும் ஹிருவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். ப்ரீத்தி வேலைக்கு சேர்த்ததில் இருந்து இன்று வரை ஹிருவிடம் எதுவும் மறைத்ததில்லை. ஹிருவும் அப்படி தான்… ஹிரு சிங்கள மொழி பேசுபவள் ஆனாலும் தமிழருக்கும் தமிழுக்கும் மதிப்பளிப்பவள். ஆயிரத்தில் ஒருத்தி என்றும் சொல்லலாம். ப்ரீத்தி கவலையாக இருந்தால் இவள் உடனே கண்டு பிடித்து விடுவாள் ..இன்றும் அப்பிடித்தான் ..,

“சரி சொல்லு… வீட்ல என்ன பிரச்சனை ..?”
“இல்லடி ஒன்னும் இல்ல …”
“இப்ப சொல்ல போறியா இல்லையா?”
“ம்ம் வேற என்ன மறுபடி கல்யாண பேச்ச ஆரம்பிச்சிட்டாங்கடி…”
“ஐயோ ப்ரீத்தி… நான் சொல்றத கேளு இன்னும் எவ்வளவு நாளைக்கு அவன் நினைப்பில இருக்க போற…? வீட்ல சொல்ற பையனை கட்டிக்கொள்டி ….”
“ம்ம்ம்ம் பார்க்கலாம் ஹிரு …சரி சரி இப்ப வேலையை பாரு…”
வேலை முடித்து வீட்டுக்குள் நுழையும் முன்பே தங்கையின் கேள்வி
“அக்கா என்ன முடிவு எடுத்திருக்கிற .??”
“காவ்யா தயவு செய்து இந்த கல்யாண பேச்ச விடும்மா”
“என்ன அக்கா சொல்றீங்க… கொஞ்சம் யோசிச்சி பாருங்க அக்கா. பிளீஸ்… நானும் திருமணம் முடிச்சிட்டன் ..ஆனால் நீங்க மட்டும்…இன்னும்…”
தங்கையின் கண்ணீர் காண விருப்பம் இல்லாமல்…
“இங்க வாங்க பெரிய மனிஷி… என்ன வாங்கிட்டு வந்தேன் பாருங்க…”
கையில் கொண்டு வந்த குங்கும பூவை தங்கையின் கையில் திணித்தாள் ப்ரீத்தி..
இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்க சென்றவளுக்கு உறக்கம் எட்டா கனியானது ..
தனது கடந்த காலத்தை மீட்டிப்பார்த்தாள்..

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தாலும் அதை அறியாத பிஞ்சு. அம்மாவின் அம்மா., சித்தி சித்தப்பா இவர்கள் தான் அம்மாவும் அப்பாவும். அண்ணா அக்கா தம்பி தங்கை, மாமா இப்படி எல்லோரும் யுத்தத்தின் கொடுமையால் கள்ளத்தோணி ஏறினார்கள் ராமேஸ்வரத்திற்கு. அங்கும் இலங்கை தமிழர்களுக்கான முகம். அதுவும் அழகு தான்…
அனைத்தையும் இழந்த பின்னும் இழக்காமல் இருந்தது அன்பு….
எல்லா பிள்ளைகளையும் விட அம்மா அப்பாவிற்கு ப்ரீத்தி தான் செல்லம். அம்மம்மா மாமா இவங்களுக்கும் தான். இதில் அக்காவிற்கு மட்டும் பொறாமை…
ப்ரீத்தி குறும்பின் மறு உருவம்… வீட்டில் பள்ளியில் இப்படி இருக்கும் இடமே இரண்டு படும்… ஆனாலும் ப்ரீத்தியை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை…!!
மகிழ்ச்சி மட்டுமே நிறைத்த வாழ்வில் ஒருநாள் இடியானது அக்காவின் வார்த்தை …
அப்பாவின் காசை அக்கா திருடுவதை கண்டதும் ப்ரீத்தி கத்தினாள்
“இரு அப்பா வரட்டும் சொல்லிக்குடுகிறேன்.”
அக்கா கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்
“உனக்கு என்னடி எங்கப்பா காசை தானே நான் எடுக்கிறன் உங்கப்பா காசையா எடுத்தேன்..? சொல்லுறதென்றால் போயி சொல்லு… அப்பா என்மேல தான் அதிகம் பாசம்… உங்க அப்பா அம்மா செத்து போய்டாங்க… அதனால தான் எல்லாரும் உன்மேல பாசம் காட்டுறாங்க…”

“ஐயே ஆள பாரு… உங்க அப்பா அம்மா தான் செத்து போய்டாங்க…” ப்ரீத்தி நம்ப மறுத்தாள்..
“நான் பொய் சொல்ல இல்ல. நீ அண்ணாக்கிட்ட கேட்டுப் பாரு…”
ப்ரீத்தி அண்ணாவின் ரொம்ப செல்லம்… அண்ணா ரொம்ப பெரியவன் … அண்ணாவிடம் சென்றாள்.
“அண்ணா என்னோட அம்மா அப்பா செத்து போய்டாங்களா…?”
அண்ணா அவளின் கேள்வியால் அதிர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல் மௌனமாய் ப்ரீத்தியை அள்ளி அணைத்துக்கொண்டான்.
மௌனம் சம்மதம் ஆகிட்டே .
அம்மா அப்பா வரும் வரை காத்திருந்தாள்.. வந்ததும் கேட்டாள்…அன்னையின் கண்ணில் கண்ணீர்… அப்பா அக்காவை நல்லா அடித்து விட்டார். இதில் உண்மையானது ப்ரீத்தி அநாதை என்று….
தொடர்ந்து இரண்டு நாட்கள் படுத்த படுக்கை… இருப்பினும் அன்னை தந்தையின் அன்பில் குறை இருக்கவில்லை …
மனதை தேற்றிக்கொண்டாள்.
அக்காவிற்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் ப்ரீத்தி நன்றாக படித்தாள்.. அம்மம்மா, மாமா, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை எல்லோரும் அன்போடு ஆதரவும் கொடுத்தார்கள்.
பள்ளிப் படிப்பு முடித்து நல்ல பெறுபேறு பெற்றாள்.
மதுரை அரசினர் சட்டக்கலூரியில் படிப்பதற்கு சீட் கிடைத்தது …

ம்ம்ம்ம் முதல் நாள் கல்லூரி செல்ல பயம் கலந்த மகிழ்ச்சி… பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த நித்யா மற்றும் பிரியாவும் ஒரே கல்லூரி என்பதால் சற்று நிம்மதி.
அது மட்டும் இல்லாமல் நித்யாவின் மாமா ஆகாஷ் அதே கல்லூரியில் சீனியர் …
ராக்கிங் குறையும் ..
முதல் நாள் என்பதால் வரவேற்பு நன்றாக இருந்தது …
இரண்டாம் நாளும் அதே மகிழ்ச்சியோடு கல்லூரியில் கால் வைத்தார்கள் தோழியர் மூவரும் …
“ஏய் இங்க வாங்க…” சீனியர்ஸ்
“ஐயோ செத்தோம் இன்னிக்கு…” பிரியா முனுமுத்தாள்..
“சரி வா பார்க்கலாம்” ப்ரீத்தி முன்னுக்கு சென்றாள்.
“அடியே மாமா தான் நிக்கிறார் பெருசா ஒன்னும் குடுக்க மாட்டாரு” நித்யா வாய்க்குள் சொன்னாள்.
நித்யாக்கு பாட்டும் பிரியாவுக்கு தனிய அடி படணும் என்றும் தீர்வானது.
ப்ரீத்திக்கு டான்ஸ் …
“எப்படி டான்ஸ் பண்றது? எனக்கு தெரியாதே…”
“தெரியாதா அடிங்…” திட்ட தொடங்கும் முன் கூட்டம் கூட தொடங்கியது. அதனால் ராக்கிங் முடிந்தது. அதுவரை அமைதியாக இருந்த நித்யாவின் மாமா
“ஏய் இலங்கை பொண்ணு …” என்றான்
கடுப்பாகினாலும் காட்டிக்கொள்ளாமல் “என்ன?” என்று கேட்டாள்..
“ஏன் உங்க நாட்டில தலையில பூ வைக்க மாட்டாங்களா .?”
“வைப்பாங்க…” என்றாள் கேள்விக் குறியோடு.
“நாளைக்கு நீ பூ வைச்சிட்டு வரணும் இல்ல அம்புட்டு தான் சொல்லிட்டேன்”
“ம்ம்ம்…. சரி” என்று தலையாட்டினாள் .
ஆனால் அடுத்த நாளும் பூ வைக்க வில்லை. பூ வைப்பது ப்ரீத்திக்கு பிடிக்காது ..
எப்படியோ தப்பி தப்பி சென்று விடுவாள். ஒருநாள் நன்றாக மாட்டுப் பட்டு விட்டாள்…
“சொன்னா கேட்க மாட்டியா நீ…” கோவத்தோடு கேட்டான் ஆகாஷ்.
“என்கிட்டே காசு இல்லை நாங்க முகாம்ல இருக்கிறோம். நீங்க வாங்கி தாங்க வைக்கிறேன்….” அவனிடம் இருந்து தப்பித்து செல்ல அப்பாவியானாள்.

“சரி போ” என்றான் .
‘அம்மாடி… எப்படியோ தப்பித்தேன் இனி இந்த பூ தொல்லை இருக்காது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
வழக்கம் போல மறு நாளும் கல்லூரி போகும் வழியில் தோழிகளோடு சேர்ந்து கொண்டாள்…
“இந்தா ப்ரீத்தி…” நித்யா மல்லிகை சரம் ஒன்றை நீட்டினாள்..
“என்னடி இது… நித்தி எனக்கு பூ வைக்க இஷ்டம் இல்லடி. உங்க மாமாகிட்ட இருந்து தப்பிக்க தான் அப்பிடி சொன்னேன்…”
“அடிப்பாவி இதை மாமா தான் வாங்கி தந்தான் உனக்கு குடுக்க சொல்லி” நித்யா கூறிமுடிக்கும் முன் தூக்கிவாரி போட்டது ப்ரீத்திக்கு ..
‘வைக்காம போகவும் ஏலாது. ஓகே வைச்சி தான் பார்ப்பமே…’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வைத்துக் கொண்டாள்.
‘அட இதுவும் நல்லா தான் இருக்கு… ‘ தன்னை தானே ரசித்துக் கொண்டாள் ..
தொடந்து நித்யா கொண்டுவந்து தர தொடங்கினாள்.. ஒரு நாள் அவள் கல்லூரி வரவில்லை. கையில் பூவோடு ஆகாஷ் நின்றான்.
‘ஆகாஷ் கொடுக்கும் பூவை எடுப்பதா வேண்டாமா ..??’ ஆயிரமாயிரம் கேள்விகள் மனதில்….
இருவரின் பார்வை பரிமாற்றங்கள்…
மௌனம்…
இதை கலைத்தது தோழி பிரியாவின் குரல்…
“அட இங்க என்ன நடக்குது…?? சீனியர் பூ குடுக்க தானே வந்தீங்க குடுங்க …” பிரியாவின் வார்த்தையில் கிண்டல் கலந்தது …
கையில் பூவை கொடுத்து விட்டு மின்னலாக மறைந்தான் .

இன்று ஒரு ஆண் கொடுத்த பூவை முதன் முதலில் தலையில் வைத்துக்கொண்டாள் ப்ரீத்தி.
நாட்கள் நகர்ந்தது முதலாம் செமிஸ்டர் விடுமுறை வந்தது. 10 நாட்கள் வீட்டில். ம்ம்ம் ப்ரீத்தி எப்பவும் போல் இருந்தாள். ஆனால் ஆகாஷ் மிகவும் குழம்பி போய் இருந்தான்.
கல்லூரி தொடங்கியதும் நித்யாவிடம் தூது அனுப்பி இருந்தான்.
“ப்ரீத்தி கூட கொஞ்சம் பேசணும் கண்டீனுக்கு வர சொல்லு” என்று
ஆனால் நித்யா அதை சொல்லாமல் .
“ப்ரீத்தி வா கன்டீன் போய்ட்டு வருவம்” என்றாள்..
பிரீதிக்காக காத்திருந்தான் ஆகாஷ்
“ஏய் இலங்கை பொண்ணு உன்கூட கொஞ்சம் பேசணும்…”
“என்கூட என்ன பேசணும்…?”
“எனக்கு உன்ன பிடிச்சி இருக்கு… இந்த 10 நாள் உன்னை பார்க்காம பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருந்திச்சி. எப்பவும் நீ என்கூடவே இருக்கணும். என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா உனக்கு…??”
ஆகாஷ் இப்படி கேட்டதும் திகைத்து நின்றாள் ப்ரீத்தி…
“மாமா என்ன இது ?” எதுவும் புரியாமல் கேட்டாள் நித்யா ..
“ஆமா நித்யா … இவள பார்த்ததில இருந்து என்னமோ இவள் எனக்கானவள் என்று தோணுது… இன்னும் ஆறு மாசம் தான். என் படிப்பு முடிஞ்சிரும்… அப்புறம் கண்டிப்பா நல்ல வேலை கிடைச்சிரும்… என்னால இப்ப தெளிவான முடிவு எடுக்க முடியும்… ப்ரீத்திக்கிட்ட கேட்டு சொல்லு… நான் வாழ்றதும் சாகிறதும் அவள் கையில தான்… நான் போறேன்…”
அவ்வளவு தான் ப்ரீத்தி அழ தொடங்கி விட்டாள்..
நித்யா தேற்றினாள்
“என் மாமா இது வரைக்கும் யாரையுமே லவ் பண்ணது இல்லடி… அவர் பேச்சிலேயே புரியுது உன்னை எவ்வளவு நேசிக்கிறார் என்று… புரிஞ்சிக்கோ…”
அன்று இரவு முழுவதும் ப்ரீத்தி உறங்கவே இல்லை …

ஏற்கனவே ஆகாஷ் மேல் ஈர்ப்பு இருந்தாலும் அவனின் முரட்டு தனத்திற்கு பயந்து இருந்தாள் ப்ரீத்தி ..
உறங்கும் முன்னே விடிந்தது. பயத்துடனே தான் கல்லூரி சென்றாள்….
ப்ரீத்தி… நித்தியின் குரலுக்கு சுயநினைவுக்கு வந்தாள்.
“என்னாச்சி ப்ரீத்தி….”
“ம்ம்ம்ம் ஒன்னும் இல்லடி… உன் மாமாகிட்ட என்னடி சொல்லுவேன்… அது தான் யோசிக்கிறேன்…”
“ஒன்னும் யோசிக்காத இந்தா… மாமா லெட்டெர் தந்திச்சி உனக்கு குடுக்க சொல்லி… நீ படிச்சிட்டு பதில் எழுது…”
“ஏய் இங்க குடு… லவ் லெட்டெர் அய் ஜாலி…” பிரியா பறித்தாள்.
“பிரியா குடுடி ….பிளீஸ் டி” கெஞ்சினாள் ப்ரீத்தி…
“ஓகே தப்பிச்சி போ…” தோழிகளின் கிண்டல்.
ஆகாஷ் நேற்று நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டு இருந்தான். யோசித்து முடிவு சொல்ல சொல்லியும் எழுதி இருந்தான்.
‘அம்மாடி இது போதும்…’ ப்ரீத்தி நிம்மதி பெருமூச்சி விட்டாள்..
பதில் எழுதினாள். முதலில் நட்பாக வரைந்த மடல்கள் கவிதையானது. ப்ரீத்தியின் எழுத்தை ரசிக்க தொடங்கினான் ஆகாஷ்.
அவனின் ரசனை, அன்பு, பரிவு, ப்ரீத்தியும் அவன் மேல் உயிரானாள்..
ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியாத நிலை. பார்க்கும் போது கண்கள் மட்டுமே பேசியது. மிகுதி எல்லாம் கடிதத்தில் தான். ஆகாஷ் படிப்பை முடித்து வெளியேறினான். இருப்பினும் வீடு பக்கம் என்பதால் பார்த்துக்கொள்ள தவறியதில்லை.
ப்ரீத்தியின் அண்ணா தங்கைக்கு மொபைல் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அட வேற என்ன வேணும். தொலைபேசியில் பேசிக்கொள்ள தொடங்கினார்கள் …
ஒரு நாள் விளையாட்டாக ப்ரீத்தி
“அது சரி ஆகாஷ் நான் ஈழத் தமிழ் பொண்ணு உங்க வீட்ல ஏற்றுக்கொள்ளுவங்களா என்னை …?”
“வை இன்னும் பத்து நிமிசத்தில எடுக்கிறேன்” தொடர்பை துண்டித்தான் ஆகாஷ் .
‘என்னாச்சி இவனுக்கு… இப்ப நான் என்ன தான் தப்பா கேட்டேன்…?’ தன்னை தானே ஆயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டாள் ப்ரீத்தி.. இருப்பினும் மீண்டும் எடுக்க வில்லை. காரணம் அவள் தவறு செய்யாவிட்டால் யாரிடமும் கெஞ்ச மாட்டாள்.

அட சொன்னது போல கால் பண்றானே எடுத்து
“ஹலோ” என்றவள் திகைத்தாள் .
காரணம் மறு முனையில் ஆகாஷின் தாய்
“நல்லா இருகிறீயா கண்ணு …” அன்பு கலந்த தாயின் வார்த்தையில் அடிமையாகி போனாள் ப்ரீத்தி…
“நல்லா இருக்கேன் அம்மா ….”
“தாயி என் மகனுக்கு உன்னை புடிச்சி இருந்தா எனக்கும் புடிச்சி இருக்கு மா… ஒருநாளைக்கு வீட்டுக்கு ஒரு எட்டு வந்திட்டு போ கண்ணு …”
வாயடைத்து நின்றாள்.
‘இது கனவா இல்லை நிஜமா ..?’
“என்ன குட்டிமா ..இப்ப ஓகேதானே…?”
” ஐ லவ் யு டா …..” முதல் முறை காதல் சொன்னாள் ப்ரீத்தி ….
“ப்ரீத்தி… ப்ரீத்தி…” தன்னை தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டான் ஆகாஷ்.
“ஐ லவ் யு சோ மச் குட்டிமா”
இது தான் காதலா …சிறகுகள் இன்றி வானத்தில் பறந்தனர் இருவரும்…

விதி யாரை தான் விட்டது …ப்ரீத்தியை அக்காவின் உருவத்தில் துரத்தியது. அவளுக்கு திருமணம் இலங்கையை சேர்ந்த ஒருவரோடு நிச்சயமானது.
“ப்ரீத்தி… உன் படிப்பு முடிய எல்லாரும் நாட்டுக்கு போவோம். இப்ப யுத்தமும் இல்லை தானே .?”
அம்மாவின் கேள்வி தலைசுற்ற வைத்தது.
“ஏன் அம்மா அவசரம் இங்கயே இருப்பமே ..?”
“இல்லடி அக்காவ அங்க அனுப்பிட்டு இங்க நாங்க எப்படி இருக்கிறது நாங்களும் போவம்…”
இதுக்கு மேல பொறுமையாய் இருந்தால் காதல் கப்பலேறி விடும். அதனால் துணிவை வரவழைத்துக் கொண்டு அம்மா அப்பாவிடம் காதலை சொன்னாள்…
அவ்வளவு தான் .. முதல் முறை அம்மா சித்தி ஆனால்….
”கருமம் கருமம் யார போயிட்டு லவ் பண்றாள் பாருங்க… அவங்க சாதி சரியில்ல தெரியும் தானே… அந்த நித்யா பொண்ணு இங்க வாறது சரி இஷ்டம் இல்ல… அதுல அவ மாமன லவ் பண்றாளாம்… ச்சீ…! இது நடக்கவே நடக்காது சொல்லிட்டேன்…” அம்மாவின் வார்த்தைகள் அனலாய் கொதித்தது.
மௌனமானாள் ப்ரீத்தி.
இது பற்றி ஆகாஷுக்கு எதுவும் சொல்லவில்லை. இதை கேட்டால் அவன் துடித்துப் போவான்… பாவம்.
இரண்டு நாட்களின் பின் அம்மா அன்பாக பேசினாள்…
“சரி விடு உன்படிப்பை முடி… என்ன செய்ய எனக்கு இஷ்டம் இல்ல. ஆனா நீ ஆசை படுற செய்து வைக்கிறன் …. ” இறுக்கி அனைத்துக் கொண்டாள் அன்னையை …
உடனே ஆகாஷுக்கு கால் பண்ணி சொன்னாள். அவனுக்கு வேற என வேணும்….
“குட்டிமா இனி நீ எனக்கானவள்… எனக்கு மட்டும் நீ எனக்கு மட்டும்தான்…”
“அடேய் லூசு நான் எப்பவும் உனக்கு தான்டா…”

ப்ரீத்தியின் படிப்பு முடிந்தது. ஆகாஷும் வக்கீல் ஒருவரிடம் ஜூனியர் ஆக வேலை செய்ய தொடங்கினான்.
“நான் நாட்டுக்கு போக எல்லாம் செய்திட்டன்… இன்னும் ஒரு மாசத்தில போக முடியும்… ”
“அம்மா இப்பவே ஏன் .?”
“இல்லடா செல்லம் அக்காட கல்யாணம் அங்க தான் வைக்கணுமாம்… பொடியன்ட ஆக்கள் சொல்லிடாங்க…”
“ம்ம் அம்மா நான் இங்க இருக்கவா ..?”
“நீ இல்லாம எப்படி செல்லம் சொல்லு …”
“இல்லமா ஆகாஷ்…”
“அக்கா கல்யாணம் முடியட்டும் அடுத்து உன் கல்யாணம் தானே… உன் சந்தோசம் முக்கியம்டா…”
“அம்மாவா ஆகாஷ்ஷா… ஆகாஷிடம் நடந்ததை சொன்னாள்… லூசாடி நீ உன்னை பார்க்காம நான் எப்படி இருப்பேன்…? என்னால முடியாது நீ போக வேணாம் சொல்லிட்டேன்… பிளீஸ்டா குட்டிமா நீ இல்லாட்டி நான் எப்படி டி சொல்லு…”

“அச்சோ ஆகாஷ்… அம்மாவே சொல்றாங்கடா எனக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கலாம்… பிறகு என்னடா .? எனக்கு மட்டும் உன்னை பார்க்காம இருக்க முடியுமா…?? மொபைல் இருக்கு தானே பேசலாம் தானேடா பிளீஸ் டா…”
“ஓகே சரி அப்போ பதிவு திருமணம்
செய்திட்டு போ… சரியா… எங்க அம்மா உங்க அம்மா ரெண்டு பேரும் வந்து பதிவு திருமண செய்து வைக்கட்டும் நீ போய்ட்டு வா…”
“ஓகேடா… அம்மாகிட்ட சொல்றேன் சரியா…? இப்ப கொஞ்சம் சிரியேன்…”
“ஐ லவ் யு குட்டிமா. நீ எப்பவும் எனக்கு வேணும்…”
“அம்மா…”
“சொல்லு ப்ரீத்தி…”
“இல்லமா… நான் போனால் வரமாட்டேன் என்று ஆகாஷ் பயப்பிடுறான்… பதிவு திருமணம் செய்திட்டு போக சொல்லுறான் அம்மா… அப்பிடி செய்து வைக்கிறீங்களா.?”
”ப்ரீத்தி… என்னம்மா இது …?? அக்காவுக்கு முதல் தங்கச்சிக்கு எப்படி செய்றது சொல்லு… உனக்கு என்மேல நம்பிக்கை இல்ல அது தான்… உன்ன பெத்த அம்மாவா என்னை நீ நினைச்சி இருந்தா இப்படி நீ கேட்க மாட்ட… வளர்த்தவள் தானே… அது தான்…”
இடி விழுந்தது போல இருந்தது ப்ரீதிக்கு.
‘ஐயோ இது வரைக்கும் அம்மா இப்படி பேசியே இல்லயே… அவங்கள இப்படி நோகடிச்சிட்டேனே… கடவுளே மன்னிச்சிரு….’ என எண்ணியவள்
”அம்மா…. அப்பிடி இல்லமா நீங்க எப்பவும் என் அம்மா தான் தெரியாம கேட்டுட்டேன் என்னை மன்னிச்சிருங்க அம்மா…”
“என் புள்ளைய எனக்கு தெரியாதா…. நான் சும்மா சொன்னேன் செல்லம் அழாத” அம்மா தேற்றினாள்.
“ஆகாஷ்…”
“ம்ம்ம்ம் சொல்லு குட்டிமா …”
“ஒன்று சொன்னா திட்ட மாட்டியா .?”
“இல்லடா செல்லம் சொல்லு”
“அம்மா சொல்றாங்க அக்கா இருக்க தங்கச்சிக்கு பதிவு திருமணம் செய்ய கூடாதாம் .. அக்கா கல்யாணம் முடிஞ்சதும் எங்களுக்கு பண்ணி வைகிறாங்கலாம்…”
“குட்டிமா…”
“என்ன ஆகாஷ்…?”
“உனக்கு என்னை பிடிக்கலையா…?”
“ஏன்டா இப்படி கேட்கிற… நீ தானே எனக்கு எல்லாமே…”
“இல்ல என்னை விட்டு போக போற தானே அதான்…”
“இல்லடா வளர்த்தவங்க பாவம்லடா… நான் என்ன செய்வேன் சொல்லு…”
“ஒன்னு சொல்லவா… நீ அங்க போறது எண்டா என்னை மறந்திரு ..நான் செத்திட்டன் என்று நினைச்சிக்கோ…”
“லூசாடா நீ .? அப்போ நான் செத்துடுறேன் நீ இரு… இனி என்னோட பேசாத போ…”
“ஏய் ஏய் சரி சரி விடு… போய்ட்டு எப்ப வருவ.?”
“அக்கா கல்யாணம் முடிஞ்சதும் ஓடி வாறன் சரியா .. ம்ம்ம்ம்ம்ம்ம்… கோவம் இல்ல தானே ..??”
“இல்ல குட்டிமா… போயிட்டு கால் பண்ணனும் ஒரு நாள் கூட பேசாம இருக்க கூடாது சரியா…”
“அம்மாடியோ …கண்டிப்பாடா…”

இலங்கை செல்வதற்கான நாளும் வந்தது… பிரியா, நித்யா, ஆகாஷ் எல்லாரும் விமானநிலையம் வரை வந்து வழி அனுப்பினார்கள்…
விமானம் புறப்படும் வரை ஆகாஷ் ஓதிய மந்திரம் போனதும் கால் பண்ணு ….
விமானம் மட்டும் அல்ல அன்றோடு ப்ரீத்தியின் மகிழ்ச்சியும் பறந்து போனது ….
இலங்கை விமான நிலையத்தில் வைத்தே
“ப்ரீத்தி மொபைல் ல கொஞ்சம் தா… என் மொபைல் ல பேட்டரி இறங்கிடிச்சி…” மொபைல் பறிமுதல் ஆனது.
கொழும்பில் வாடகைக்கு தான் வீடு எடுத்திருந்தார்கள். வீட்டுக்கு போனதுமே
“அம்மா ஆகாஷ்க்கு கால் பண்ணனும் சிம் காட் வாங்கணும் வாங்கி தாங்க அம்மா…”
“எதுக்கு இப்ப அவனுக்கு கால் பண்ண… சும்மா இரு… மனுசர் இருக்காங்க மனத்த வாங்காத…”
ஒரு நாள் இரண்டு நாள் ஒரு மாதம் கடந்தது மொபைல் தரவும் இல்லை. வெளியே செல்ல விடவும் இல்லை. ப்ரீத்தியின் நினைவு முழுவதும் ஆகாஷ்ஷை சுற்றியே இருந்தது … ப்ரீதிக்கு உதவி கேட்கவும் வழி இல்லை காரணம் மொழி தெரியாது … கையில் காசு இல்லை… என்ன செய்வது ..????
ப்ரீத்தியின் கால் இன்றி ஆகாஷ் துடித்தான் . குடிக்கவும் தொடங்கினான. எந்த தாயால் தாங்கிக்கொள்ள முடியும் ஒரு மகன் தினம் குடிப்பதை. ரோட்டில் விழுந்து கிடக்கும் அளவிற்கு குடித்தான்.
வேறு வழி தெரியாத தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் சாப்பிட்டு விட்டார். நித்யா அன்று அங்கு இருந்ததால் காப்பாற்றி விட்டார்கள். அன்று ப்ரீத்தி மேல் ஆகாஷின் காதல் வெறுப்பாய் மாறியது.
அம்மா மற்றும் அக்காவின் விருப்பப்படி ப்ரீத்தி விட்டு சென்று 5 மாதத்தில் அக்கா மகள் நித்யாவை திருமணம் செய்தான்.
இதில் எதுவுமே ப்ரீத்தி அறிந்திருக்க வில்லை.

5 மாததின் பின் ப்ரீத்திக்கு அண்ணாவின் மொபைலில் இருந்து முகாமில் இருக்கும் தோழி ஒருத்தியின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. பக்கத்து வீட்டு அக்காவின் மொபைலில் இருந்து அந்த தோழிக்கு கால் பண்ணி நடந்தவற்றை கூறினாள். நித்யாவின் நம்பர் கேட்டாள்.
நம்பர் கிடைத்ததும் நித்திக்கு கால் பண்ணினாள்.
“நித்தி நான் ப்ரீத்தி…”
“ப்ரீத்தி எங்கடி போன இவ்வளவு நாள் ..??”
“அத பிறகு சொல்றேன் . என் ஆகாஷ் எங்கடி பிளீஸ் அவன்கிட்ட குடுடி” விம்மி வெடித்தாள் ப்ரீத்தி…
“கொஞ்சம் இரு ப்ரீத்தி… மாமா மாமா உங்களுக்கு கால் … ஹலோ ஹலோ குட்டிமா…” என்றவன் கனலாக மாறினான்.
“ஏன்டி எடுத்த.? யாருடி நீ .?? நிம்மதியா இருக்கிறேன் கெடுக்க வந்திட்டியா…?? வெக்கம் இல்லையாடி எந்த மூஞ்ச வைச்சிக்கொண்டு கால் பண்றா … ஓடுகாளி…”
”ஆகாஷ்…”
“சீ என் பெயர கூட சொல்லாத… எவனும் கெடைக்கலயா… இளிச்சவாயன் என்னை போல? ஒட்டிக்கிற பார்கிறியா ..??”
எதுவும் புரியாது நின்றாள் ப்ரீத்தி… இங்கு நடந்தவற்றை சொல்லி ஆகாஷின் அன்பு ஆறுதலை எதிர் பார்த்தவள் அவனின் அர்ச்சனையில் ஆடிப்போனாள் ..
“இதோ பாருடி இப்ப நான் கல்யாணம் முடிச்சி நிம்மதியா இருக்கேன்… இனி என் வாழ்க்கைக்கு வராத… சொல்லிட்டேன்”
தொடர்பை துண்டித்து விட்டான். இடி விழுந்தது போல் இருந்தது ப்ரீத்திக்கு. ஆனாலும் கோவத்தில் சும்மா திட்டி இருப்பான் என்று நினைக்கும் போதே மறுபடி மொபைல் அலறியது…

“தங்கச்சி உங்களுக்கு தான் இந்தியா கால்…”
மனசுக்குள் கோடி பட்டாம்பூச்சி… ஆகாஷ் தான். மன்னிப்பு கேட்க எடுக்கிறான் ….
எடுத்தும்
“ஹலோ ஆகாஷ்… சாரி டா இங்க நடந்தது தெரியாதுடா உனக்கு சாரி டா .
“ப்ரீத்தி நான் நித்யா …”
“நித்தி பாருடி பிரவீன் திட்றாண்டி … இங்க நான் பட்ட பாடு ஒவ்வொன்றாக சொல்லி முடித்தாள். மறுமுனையில் விம்மி விம்மி அழுதாள் நித்யா.
”அழாதடி இப்ப எல்லாம் ஓகே… ஆகாஷுக்கு சொல்லணும் டி”
“என்னை மன்னிச்சிரு ப்ரீத்தி…. உனக்கு நான் துரோகம் செய்திட்டண்டி… அங்கு நடந்தவற்றை சொல்லி முடித்தாள் நித்யா. நீ வருவ என்று சொன்னண்டி..ஆனாலும் இப்படி எல்லாம் நடந்திரிச்சிடி…”
ஓ… என்று கத்தி அழுதுவிட்டாள் ப்ரீத்தி. மொபைல்கார அக்கா என்னாச்சி என்றார்கள்.
“ஒன்னும் இல்ல அக்கா…” கண்களை துடைத்துக் கொண்டாள்.
“இனி நீ என்ன பண்ணுவ…பாவம் நீ… ப்ரீத்தி என்கூட கோவமா நீ ..??” “இல்லடி கொஞ்சம்கூட கோவம் இல்ல ஆகாஷை நல்லா பார்த்துக்கொள். இங்க நடந்த எதுவும் ஆகாஷுக்கு சொல்லாத…”
“இல்லடி எல்லாத்தையும் அவரும் கேட்டுக்கொண்டு தான் இருக்கார்…” “அடக் கடவுளே…”
“இரு அவர் பேசணுமாம் …”
“வேணாம் நித்யா… நான் அப்புறம் பேசுறன்…” தொடர்பை துண்டித்தாள்.

அவ்வளவு தான். அன்று தொடக்கம் மௌனமும் தனிமையும் ப்ரீதிக்கு சொந்தமானது . இரண்டு வருடங்கள் இன்று முடிவுற்ற போதும் தன் தாய், தகப்பனை ‘அம்மா அப்பா’ என்று இதுவரை அழைத்ததில்லை. தங்கையோடும் தம்பியோடும் மட்டுமே பேசுவாள். தங்கை காதலில் விழ திருமணமும் செய்து வைத்தாள்…

நல்ல சம்பளம் அவள் விரும்பிய வேலை… குடும்பப் பொறுப்பு… இன்று ப்ரீத்தியை நம்பியே குடும்பம் இருக்கு… ஆனால் ப்ரீத்திக்கானதாய் இருப்பது ஆகாஷின் நினைவுகள்…

“அக்கா… அக்கா …”
தங்கையின் குரலில் நினைவில் இருந்து மீண்டவள்.
“என்ன காவ்யா .??”
“விடிஞ்சிட்டு அக்கா… ”
“அடக் கடவுளே .. சரிமா வாறன் இரு …”
“அக்கா என்ன முடிவு எடுத்து இருக்க .??”
“ம்ம்ம்ம்ம்ம் …..பாப்போம் என்னை புரிஞ்சிகொண்டு …..கடைசி வரைக்கும் அம்மா அப்பாவ வைச்சி பார்க்கிற ஒருத்தன் கிடைச்சா உனக்கு சொல்றேன்.. அப்போ நீயே எனக்கு கட்டிவை … அது வரைக்கும் அக்காவ கட்டாயபடுத்த கூடாது .. ஓகேதானே …எனக்கு ஆபீஸ் போக டைம் ஆச்சி ……பாய் பாய்……”

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இன்றைய அனைத்துச் செய்திகளையும் படிக்க , இங்கே க்ளிக் செய்யவும்
error: Alert: Content is protected !!