கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் –கயல்விழி

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே…இவ பெரிய கிளியோபட்ரா ..
உயிர் குடிக்கும் கேலிகள் .

அடடடா …
சோகம் ஏன் உங்களிடம்
சோர்வே இல்லை என் மனதிடம் .

கறுப்பான கல் கடவுள்
சிலையாகும் என்றால்
கரு இமைகள் தான்
கண்ணை பாதுகாக்கின்றது
என்றால்
என் தேகம் கறுப்பென்பதில்
கவலை ஏன் எனக்கு .!

வெண்ணிலவை அழகாக்க
இருள் வேண்டும் என்றால்
கார்மேகம் வந்தால் தான்
மழை பொழியும் என்றால்
கறுப்பாய் பிறந்ததால் ஏன் நான்
கவலை கொள்ளவேண்டும் .

வெண்கூந்தல் அழகென்றும்
வெண்விழி அழகென்றும்
வர்ணிக்காத போது
ஏன் வெக்கப்பட வேண்டும் நான்
கறுப்பாய் பிறந்ததற்கு .

கறுப்பன் ஆட்சி புரியும் போது
கறுப்பி அழகியாகும் போது
கறுப்பால் மழை பொழியும் போது
கறுப்பே மண்ணை ஆளும் போது
கருவாச்சி காவியமான போது
கயல்விழி கவியானால் என்ன ..?
நாளை கவி வரியேனும் பேசட்டும்
கறுப்பை கண்டு கலங்கவில்லை
இவள் என்று ….!!!

error: Alert: Content is protected !!