டில்லி மாணவி வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிடும் நாள் அறிவிப்பு!

டில்லி மாணவி நிர்பயா கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

2012ஆம் ஆண்டு டில்லி மருத்துவ மாணவியான நிர்பயா (23 வயது) பஸ்ஸில் வைத்து, கும்பல் ஒன்றால் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் வீதியில் வீசப்பட்டு, மீட்கப்பட்ட நிலையில் சில நாட்களில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளில் டில்லி பொலிஸார் வழக்குத் தொடுத்தனர்.

இவர்களில் ராம்சிங் என்பவர் திகார் சிறையில் 2013ஆம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர், வழக்கு விசாரிக்கப்பட்டு, வயது குறைந்த குற்றவாளி ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.

2013ஆம் ஆண்டு எஞ்சிய நால்வருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை 2014ஆம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்றமும் , 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதையடுத்து நால்வரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்தன.

இந்நிலையில், குறித்த தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நான்கு பேரையும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் உச்சநீதிமன்றில், சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த மனு நிராகரிக்கப்பட்டால், ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கவும் வாய்ப்புள்ளது எனத் தெரியவருகிறது.