முஸ்லில் அரசியல்வாதிகளை கைதுசெய்யக் கோரி சி.ஐ.டியில் வாக்குமூலம்!

தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு தென்னிலங்கையின் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் ஒன்றான சிங்கள தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புவைத்திருந்தனர் என முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரவூக் ஹக்கீம், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களில் ஒருவராக சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளை நடத்திவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிகவிரைவில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்வார்கள் என்று நம்புகிறோம்.

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ரிஷாட் பதியூதீன், அசாத்சாலி, முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக நாங்கள் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டிருந்தோம். அதுதொடர்பில் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காகவே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று அழைத்திருந்தார்கள். சகல தகவல்களையும் திரட்டி சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக சம்பந்தன் செயற்பட்டதுபோல சஹ்ரானின் ஐ.எஸ் தீவிரவாதிகளின் அரசியல் பிரிவுகளாக ரிஷாட் போன்றவர்கள் செயற்படுகின்றனர். அதனால், அவர்களை உடனடியாகக் கைது செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம்.

தேசிய பாதுகாப்பு, இனவாத சக்திகளை ஒடுக்குதல் போன்றவற்றில் கவனமின்றி இருந்தமையால்தான், ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையைத் தாக்குமளவுக்கு நிலைமை உருவானது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் “என்றார்.