அமைச்சருக்கு வந்த சோதனை!

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சராக உள்ளவர் கமலக்கண்ணன்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவர், புதுச்சேரி அரச கூட்டுறவு அமுதரசுரபி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த வியாழன்று இரவு டீசல் நிரப்புவதற்காக காரை நிறுத்தியுள்ளார்.

எனினும், குறித்த நிலையத்தில் நின்ற ஊழியர்கள், அமைச்சரின் காருக்கு டீசல் நிரப்ப மறுத்தனர். இதனால் அமைச்சரின் காரை ஓட்டி வந்த சாரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் டீசல் நிரப்ப மறுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது,

“கடந்த நான்கு மாதங்களில் அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பியதால் இரண்டு கோடி 30 லட்சம் ரூபா நிலுவையில் உள்ளது. இதனால், இந்த நிலுவைத் தொகையை உடனே திரும்ப செலுத்தாவிட்டால், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் அரச வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது என அரச துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.

இதனால் டீசல் நிரப்பாமலே, காரைக்கால் வீட்டுக்குச் சென்றுவிட்டார் அமைச்சர்.

பின்னர் அடுத்த நாள் (03) காரில் டீசல் பற்றாமையால், அமைச்சர் வழக்கத்துக்கு மாறாக புதுச்சேரி அரச போக்குவரத்துக் கழக பஸ்ஸில் புதுச்சேரிக்குச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், “தனது பஸ் பயணத்துக்கும் காரில் டீசல் நிரப்பாமைக்கும் எந்தவிதத் தொடர்புமில்லையென மறுத்த அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தாம் பஸ்ஸில்தான் சென்று வந்தார் எனத் தெரிவித்தார்.

மேலும் “அரச பஸ்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அறியமுடிகிறது. சொந்த ஊரில் இருக்கும்போது மோட்டார் சைக்கிளில்தான் நான் பயணிப்பது வழமை. நெடுந்தூரம் செல்லும்போது மாத்திரமே காரில் பயணம் செய்வேன். ஒரு மாறுதலுக்காக புதுச்சேரிக்கு பஸ்ஸில் போகலாம் என வந்தேன்” என மேலும் தெரிவித்தார்.