" "" "

தடை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.! ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டில் இதனை செய்யுங்கள். மரணித்தவர்களின் ஆன்மா சாந்திபெறட்டும்.!!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகரித்து வரும் நிலையில் மரணித்தவர்களை கூட நினைவு கூற முடியாதவாறு முடக்கப் பட்டுள்ளனர். தமிழின அழிப்பின் 12வது ஆண்டு நினைவேந்தலை தடுப்பதற்கு கொரோனா வைரஸை காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தை அரசு முடக்கியுள்ளது.

இது வரை முல்லைத்தீவில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்காத நிலையில் நேற்றைய தினம் சுமார் 250திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டதாக கூறி முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றிலும் முடக்கியது அரசு. பொலீஸாரும் இரணுவத்தினரும் குவிக்கப் பட்டுள்ள நிலையில் மக்களை வீட்டிற்குள் அடைந்திருக்குமாறு கூறப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் யாழ் பல்கலைக்கழக நினைவு தூபியை அழித்து அராஜகம் செய்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தால் மீண்டும் கட்டப் பட்டது,

ஆனால் இம்முறை அங்கும் தடை விதிக்கப் பட்டதுடன் பல்கலைக்கழகத்தை சுற்றி முப்படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். ஆயிரம் கணக்கான உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் இன்று ஒரு நாளை தங்கள் வலிகளை கதறி வெளிப்படுத்தும் நாளாக வைத்திருந்தனர். அவர்களின் ஆன்மாக்களோடு இன்றைய நாளில் பேசுவது போல் உணர்ந்தனர்.

ஆனால் இன்றைய நாளை மிக மோசமாக தடுத்துள்ள நிலையில் “யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்” மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. எமக்கு இம்முறை முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது எமது முற்றம் தான். எமது வலிகளை நினைவுகளை, அத்தனை இலகுவில் நிறுத்திவிட முடியாது. உங்கள் முற்றங்களை முள்ளிவாய்க்கால் ஆக்குங்கள், மாலை 6 மணிக்கு அனைத்து கோயில்களிலும் மணி ஒலிக்கட்டும்.

முற்றத்தில் விளக்குகள் ஒளிரட்டும். உங்கள் வீடுகளில் ஒருவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து உண்ணுங்கள். இது எமது உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் ஆனது. இதனை சட்டம் போட்டு தடை செய்யட்டும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெறுவோம். எம்மை சட்டத்தால் தோற்கடித்து விட்டதாய் நினைக்கட்டும் எங்கள் இறுதி உயிர் மூச்சு இருக்கும் வரை நாம் எங்கு இருக்கிறோமோ அதுவே எமது முள்ளிவாய்க்கால் முற்றம். நினைவிடத்தை மட்டுமே அழித்தார்கள் நினைவுகளை அல்ல என கூறியுள்ளனர். மக்களே தயாராகுங்கள்.!!